search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஷாந்த் சர்மா"

    பெர்த் டெஸ்டில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை சமாளித்து ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் அஸ்வின், ரோகித் சர்மா நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான களம் இறங்கிய ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் விளையாடியது. மதிய உணவு இடைவேளை 26 ஓவரில் விக்கெட் 66 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஆரோன் பிஞ்ச் 103 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் அரைசதத்துடன் வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது.


    ஷேன் மார்ஷ்

    பின்னர் உஸ்மான் கவாஜா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஹாரிஸ் 70 ரன்னில் வெளியேறினார். ஹேண்ட்ஸ்காம்ப் 7 ரன்னில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 148 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.


    பும்ரா பந்தில் ஆட்டமிழந்த ஆரோன் பிஞ்ச்

    ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஷேன் மார்ஷ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

    7-வது விக்கெட்டுக்கு கேப்டன் டிம் பெய்ன் உடன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. டிம் பெய்ன் 16 ரன்னுடனும், பேட் கம்மின்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    பெர்த் டெஸ்டில் க்ரீன் பிட்சியில் விளையாட இருப்பது பதற்றத்தை விட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

    ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா பேட்டிங்கில் பலம் இழந்து காணப்படுகிறது. அடிலெய்டு டெஸ்டில் புஜாரா, ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி, லோகேஷ் ராகுல் 2-வது இன்னிங்சில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார்கள்.

    நாளை பெர்த்தில் தொடங்கும் 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால்தான் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு ஒரே வழி இந்தியாவின் பேட்டிங்கை அடியோடு சீர்குலைப்பதுதான் என்ற முடிவிற்கு ஆஸ்திரேலியா வந்துள்ளது.

    பெர்த் பிட்சில் ஏற்கனவே பவுன்ஸ், வேகம் இருக்கும். தற்போது அதிக அளவில் புற்களுடன் காணப்படுகிறது. க்ரீன் பிட்ச்-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புற்கள் அதிகமாக இருந்தால் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் மூலம் இந்தியாவின் பேட்டிங் ஆர்டரை தகர்த்து விடலாம் என நினைக்கிறது.

    ஆனால் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகிய ஐந்து வேகப்பந்து ஆயுதத்தை வைத்திருக்கும் இந்தியா, க்ரீன் பிட்சியால் பதற்றமடையவில்லை. ஆர்வம்தான் அதிகமாக உள்ளது என்று விராட் கோலி அதீத நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்டில் எங்களுக்குத்தான் அதிக அளவில் வாய்ப்புள்ளது. இதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. உண்மையிலேயே ஆஸ்திரேலியா பெர்த் போன்ற அதன் சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது. ஆஸ்திரேலியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களை விட, பெர்த் அவர்களுக்கு அதிக அளவில் சாதகமாக இருக்கும். ஆனால், எங்களுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது.



    தற்போதைய காலக்கட்டத்தில் க்ரீன் பிட்ச்களை கண்டு நாங்கள் பதற்றமடையவில்லை. அதைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது. ஏனென்றால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறோம். 20 விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, அவர்களுடைய துல்லிய பந்து வீச்சில் அதிக நம்பிக்கை உண்டாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் உச்சக்கட்ட பார்மில் இருக்கும்போது, அணிக்கு அது சிறந்த விஷயமாகும்.

    பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது ஊக்கத்தை கொடுக்கும். ஏனென்றால், பந்து வீச்சாளர்கள் மீது அவர்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். சிறப்பாக பேட்டிங் செய்துவிட்டால், உறுதியாக விரும்பும் முடிவு கிடைக்கும் என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்’’ என்றார்.
    அடிலெய்டு டெஸ்டில் நான்கு பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி 20 விக்கெட்டுக்களை சாய்த்தது பெருமையான விஷயம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பெரும்பாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்கி விளையாடி வருகிறது. 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதால், கேப்டன் விராட் கோலி இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

    ஆனால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரின்போது பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதால் இந்திய அணி சொற்ப ரன்களில் வெற்றி வாய்ப்புகளை இழந்தது. இதனால் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 6-வது பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா அணியில் இடம்பிடித்தார்.

    இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, அஸ்வின் ஆகிய நான்கு பந்து வீச்சாளர்களை வைத்து இந்தியா விளையாடியது. பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத நிலையிலும், நேர்த்தியாக பந்து வீசினார். 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

    நான்கு பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 31 ரன்னில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

    வெற்றிக்குப்பின் விராட் கோலி கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை காப்பது முக்கியமானது. நாங்கள் பேட் கம்மின்ஸை வீழ்த்திய பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. நான் ஐஸ் போன்று கூலாக இருப்பேன் என்று சொல்லமாட்டேன். ஆனால், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

    நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் விளையாடும்போது அவர்கள் ஒரு தவறு செய்ய வேண்டும். அல்லது நாங்கள் ஒரேயொரு சிறந்த பந்து வீச வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. நான்கு பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தது மிகப்பெரிய பெருமையான விஷயம்.



    இந்த தொடரில் எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல நிலைமைக்கு உயர இது உதவியாக இருக்கும். புஜாரா மற்றும் ரகானே இந்த போட்டியை அருமையாக கொண்டு சென்றனர். நாங்கள் சிறந்த அணி. இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். இதேபோல் புஜாரா மற்றும் ரகானே இணைந்து விளையாடினார்கள், எங்களின் மிகவும் திடமான ஜோடி இவர்களாகத்தான் இருப்பார்கள்.

    மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கனும். பெர்த் டெஸ்டிற்கு செல்லும்போது இதுகுறித்து யோசிப்போம். முதல் போட்டியிலேயே 1-0 என முன்னிலைப் பெற்று தந்த பிறகு, அதை நான் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.
    ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் எடுத்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்கள். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இந்தியா 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மார்ஷ் 60 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் இருந்த நிலையில் 167 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் கடைநிலை பேட்ஸ்மேன்களான பந்து வீச்சாளர்கள் களம் இறங்கிய தொடங்கினார்கள்.

    முதலாவதாக பேட் கம்மின்ஸ் களம் இறங்கினார். இவர் மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பெய்ன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பெய்ன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 136 ரன்கள் தேவைப்பட்டது.


    கம்மின்ஸ் பந்தை பவுண்டரிக்கு விளாசிய காட்சி

    இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுக்கள் மட்டுமே தேவை என்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்தனர். 8-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் இணைந்த ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஸ்டார்க் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் சேர்த்தார். ஸ்டார்க் ஆட்டமிழக்கும்போது 95 ரன்கள் தேவைப்பட்டது.

    அந்த நேரத்தில் 9-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஏற்கனவே இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் கடும் சவாலாக விளங்கி வரும் நிலையில், கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. இக்கட்டான நிலையில் கம்மின்ஸை வெளியேற்றினார் பும்ரா. அப்போதுதான் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. இருந்தாலும் இந்தியாவின் நெருக்கடி குறையவில்லை.

    கடைசி விக்கெட்டுக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. நாதன் லாயன் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். ஹசில்வுட் திறமையான வகையில் சமாளிக்க, நாதன் லயன் இலக்கை நோக்கி ரன்களை விரட்ட தொடங்கினார்.


    ஹசில்வுட் ஆட்டமிழந்து சோகமாக திரும்பு காட்சி

    ஒரு கட்டத்தில் இஷாந்த சர்மா பந்தில் நாதன் லயன் எல்பிடபிள்யூ ஆக, நடுவர் நோ-பால் என்றதால், இந்திய வீரர்கள் விரக்தியடைந்தனர். ஸ்கோர் 54-ல் இருந்து 44, 34 என குறைந்து கொண்டே வந்தது. இதனால் ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    இறுதியில் அஸ்வின் பந்தில் ஹசில்வுட் 43 பந்துகளை சந்தித்து 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 291 ரன்னில் ஆல்அவுட் ஆகி, 31 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    2-வது இன்னிங்சில் அஸ்வின் (5), இஷாந்த் சர்மா (0), முகமது ஷமி (0), பும்ரா (0) ஆகியோர் 44 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவின் டெய்ல் எண்டர்ஸ் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்ததோடு, நெருக்கடியும் அளித்துவிட்டனர்.
    ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாதுகாப்பான (defensive batting) ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நான் பார்த்ததில்லை என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 88 ஓவரில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி, அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    பெரும்பாலும் பாதுகாப்பு ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் 2-வது நாளில் 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இஷாந்த் சர்மா 15 ஓவவர்கள் வீசி 6 மெய்டனுடன் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 2.07 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    பும்ரா 20 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு 1.70 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    அஸ்வின் 33 ஓவர்கள் வீசி 50 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 1.52 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஷமி 16 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவருக்கு 3.19 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இதுபோன்று பாதுகாப்பான ஆட்டத்தை விளையாடியது கிடையாது என்று சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தனது ட்வீட்டில் ‘‘இந்தியா இந்த சூழ்நிலையை அதிக அளவில் உருவாக்க வேண்டும். தங்களது பலத்தை விட்டுவிடக் கூடாது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சொந்த மண்ணில் பாதுகாப்பு ஆட்டம் மனநிலையுடன் விளையாடினார்கள். இதற்கு முன் எனது அனுபவத்தில் அப்படி பார்த்தது கிடையாது. அஸ்வின் அபாரமாக பந்து வீசினார். தற்போது வரை அணி நல்ல நிலைமையில் இருக்க அவர்தான் காரணம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    எதிரணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் தலைவலி கொடுத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. #AUSvIND
    இந்திய டெஸ்ட் அணி கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சொந்த மண்ணில் ஜாம்பவனாக விளங்கிய இந்திய அணி தற்போது வெளிநாடுகளில் விளையாடி வருகிறது. பந்து வீச்சில் அசுர பலத்துடன் விளங்குகிறது. ஆனால் பேட்டிங்கில் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை 1-2 என இந்தியா இழந்தது. அதன்பின் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் 1-4 என தோல்வியடைந்தது.

    இந்த தொடரில் இந்தியா சார்பில் விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். கடைசி டெஸ்டில் மட்டும் லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் சதம் அடித்தனர்.

    இங்கிலாந்து தொடரில் இந்திய பந்து வீச்சாளர்களான ரிஷப் பந்த், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று விளையாட விடவில்லை. அதேசமயம் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் கடைநிலை வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களை இந்திய பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் குறைந்த ரன்களில் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

    தற்போது ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. இதிலும் டெய்ல் எண்டர்ஸ் என்ற சோதனை தொடர்ந்த வண்ணமே உள்ளன.

    அடிலெய்டு பிட்ச் ரன் குவிப்பிற்கு சாதகமான வகையில் இல்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 127 ரன்னிற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.



    7-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். அப்போது டிராவிஸ் ஹெட் 21 ரன்னுடன் களத்தில் இருந்தார். பேட் கம்மின்ஸை துணைக்கு வைத்துக் கொண்டு டிராவிஸ் 17.3 ஓவர்கள் கடத்தி விட்டார். இந்த நேரத்தில் டிராவிஸ் ஹெட் - கம்மின்ஸ் ஜோடி 50 ரன்கள் எடுத்துவிட்டது. கம்மின்ஸ் 47 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து ஸ்டார்க் களம் இறங்கினார். ஸ்டார்க்கை வைத்துக்கொண்டு அரைசதம் அடித்ததோடு 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் உள்ளனர்.

    முன்னணி பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு, டெய்ல் எண்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் தலைவலி கொடுத்து வருகிறது இன்னும் நீண்டு கொண்டே வருகிறது.
    அடிலெய்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது. ஹெட் அரைசதத்தால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா நேற்றைய 250 ரன்னிலேயே ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    ஹேண்ட்ஸ்காம்ப்

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.

    5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.


    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இஷாந்த் சர்மா

    8-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.


    கவாஜாவிற்கு எதிராக அப்பீல் கேட்கும் அஸ்வின், விராட் கோலி

    தற்போது வரை ஆஸ்திரேலியா 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் ஸ்டார்க் துணையுடன் இந்தியாவின் ஸ்கோரை எட்ட முயற்சி செய்வார்.
    ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதில்தான் முழுக்கவனம் இருக்கும் என இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

    டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கபடுகிறது.

    நாங்களும் இதில்தான் முழுக்கவனம் செலுத்துவோம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஷாந்த் சர்மா கூறுகையில் ‘‘தற்போது இருக்கும் முக்கிய சிந்தனை தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். ஒவ்வொருவரின் கவனமும் அதில்தான் உள்ளது.



    நாங்கள் தனிப்பட்ட வீரர்களின் சிறந்த ஆட்டம் குறித்து யோசிக்கவில்லை. ஒரே இலக்கு தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். பயிற்சி ஆட்டம் தொடருக்கு சிறப்பான பயிற்சியாக இருக்கும். நீண்ட காலமாக இங்கு விளையாடும்போது சூழ்நிலை பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.

    சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. இதில் இன்னும் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும்.



    எந்தவொரு வீரரும் நாட்டிற்காக விளையாட அணியில் தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் சிறந்த வீரர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஏன் நாட்டின் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எதையுமே நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.
    ரஞ்சி கோப்பை தொடருக்கான 3-வது போட்டியை ஸ்கிப் செய்யுங்கள் என்று இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வினிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. #BCCI #AUSvIND
    இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. நாளைமறுநாள் (21-ந்தேதி) டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அதன்பின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்ல அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் வீரர்கள் யாரும் எந்தவிதத்திலும் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக இருந்து வருகிறது.

    தற்போது இந்தியாவின் முன்னணி முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது போட்டி நாளை தொடங்குகிறது. ஏற்கனவே டி20 அணி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், டெஸ்ட் அணி 24-ந்தேதி புறப்படுகிறது. ரஞ்சி போட்டி 23-ந்தேதிதான் முடியும். இதனால் வீரர்களுக்கு ஓய்வு இருக்காது.

    ஆகவே, டெஸ்ட் போட்டியில் புத்துணர்ச்சியுடன் விளையாட ரஞ்சி போட்டியை ஸ்கிப் செய்யும்படி இஷாந்த் சர்மா, அஸ்வினிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

    முகமது ஷமி மட்டும் ரஞ்சி டிராபியில் பந்து வீச ஸ்பெஷல் அனுமதி பெற்றுள்ளார். ஆனால் 15 ஓவர்கள் வீசி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் கூடுதல் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா, அஸ்வின் உடல் தகுதி பரிசோதனைக்கு பின்னர் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் தேர்வு பெறுவார்கள். #INDvWI #IshantSharma #Ashwin #BCCI
    புதுடெல்லி:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் அக்டோபர் 4-ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் நேற்று கூடியது. அவருடன் தேவங் கார்வி மட்டுமே வந்து இருந்தார்.

    மற்ற தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான சரண்தீப்சிங் துபாயில் உள்ளார். ஜதின் பரஞ்செ, கதன்கோடா ஆகிய இருவரும் விஜய் ஹசாரே போட்டியை பார்ப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த 3 தேர்வு குழு உறுப்பினர்களும் வராததால் தேர்வு குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வேகப்பந்து வீரர் இஷாந்த்சர்மா, அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவர்கள் தேர்வாக உடல் தகுதி பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இருவருக்கும் வருகிற 29-ந்தேதி உடல் தகுதி சோதனை நடக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    அஸ்வின் ஏற்கனவே காயத்துக்கு தேசிய கிரிக்கெட் அகாடமில் புனர்வு பெற்று வருகிறார். அவருடன் இஷாந்த்சர்மா இணைவார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் இயக்க நிபுணர் அளிக்கும் உடல் தகுதி அறிக்கை அடிப்படையில் இருவரது தேர்வு இருக்கும்.

    உள்ளூரில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடிய பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அதை மனதில் கொண்டு 15 வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு செய்கிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தவானின் பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்ற நிலை இருக்கிறது. #INDvWI #IshantSharma #Ashwin #BCCI #TeamIndia
    ×